இந்திய-சீன ராணுவ பயிற்சி நிறைவு
DIN | Published: 23rd December 2018 01:01 AM
சீனாவின் செங்டூ நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய-சீன ராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இந்தியா-சீனா-பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்கா லாம் பகுதியில், கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே சண்டை மூளும் சூழல் உருவானது. இந்தியா-சீனா இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, 73 நாள்கள் நீடித்துவந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம் காரணமாக, கடந்த ஆண்டு ராணுவ பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபடவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து தற்போது கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது. ராணுவப் பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ராணுவப் பயிற்சி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
நகர்ப்புற பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். 7 சுற்றுகளாக பயிற்சி நடைபெற்றது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் தோழமையுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு வாரங்களாக நடைபெற்றுவந்த பயிற்சி காலத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களின் பிறந்த தினம் வந்தன.
அப்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் சக வீரர்களின் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடினர். இதற்கு முன்பு, கடந்த 2016ஆம் ஆண்டில், மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் பயிற்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.