நாட்டிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் ரயில்-சாலை இரண்டு அடுக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 4.94 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் அடுக்கில் இரட்டை அகல ரயில் பாதையும், மேல் அடுக்கில் மூன்று வழிச் சாலையும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 1997-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தேவெ கெளடா இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் வாஜ்பாயால் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2007-ஆம் ஆண்டில் இதை தேசிய திட்டமாக அறிவித்தது. மொத்தத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து திப்ருகருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தார். அங்கிருந்து நேராக ஹெலிகாப்டரில் பொகீபிலுக்கு அவர் வந்தடைந்தார். பின்னர், அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி, முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோருடன் இரட்டைப் பாலத்துக்கு பிரதமர் வந்தார்.
தின்சுகியா - நாஹர்லாகுன் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார்.
திட்டங்களை கிடப்பில் போடும் கலாசாரம் மாற்றம்: இரண்டு அடுக்குப் பாலத்தை திறந்து வைத்த பின்னர் தீமாஜி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது வளர்ச்சித் திட்டங்களை கிடப்பில் போடும் கலாசாரத்தை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார். மோடி மேலும் பேசியதாவது:
திட்டங்களை கிடப்பில் போடும் முந்தைய பணிக் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். வாஜ்பாய்க்கு இரண்டாம் முறையாக ஆட்சி வாய்ப்பு கிடைத்திருக்குமானால், பொகீபில் இரட்டைப் பாலத்தை 2008-09 காலகட்டத்தில் முடித்திருப்பார். ஆனால், அவரது அரசுக்குப் பிறகு 2014 வரையில் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்படவில்லை.
அது வெறும் பாலம் அல்ல. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் உயிர்நாடி அது என்றார் மோடி.
சிறப்பம்சங்கள்: அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் அருகேயுள்ள பொகீபில் என்னும் இடத்தில் இந்த இரட்டைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா நகரில் இருந்து அருணாசலப் பிரதேச மாநிலத்தின் நாஹர்லாகுன் நகருக்கு ரயிலில் செல்வதற்கான பயண நேரம் 10 மணி நேரத்துக்கும் மேலாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாகப் பதிவாகும் நிலநடுக்கத்தை தாங்கும் வல்லமை கொண்டது.
தொடக்கத்தில் ரூ.3,230.02 கோடியில் திட்டமிடப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி, கால தாமதம் காரணமாக ரூ.5,960 கோடி செலவில் முடிந்திருக்கிறது.
பாதுகாப்பு துறைக்கு பலம் சேர்க்கும்
பொகீபில் ரயில்-சாலை இரட்டை பாலத்தால் இந்திய பாதுகாப்புத் துறையின் பலம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் வகையில் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் பிரம்மபுத்ரா நதியின் தெற்குக் கரையில் இருந்து வடக்கு கரைக்கு எளிதாக செல்வதற்கு இந்த இரட்டைப் பாலம் பேருதவியாக இருக்கும் என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதாவது, சீனாவை ஒட்டிய இந்தியாவின் தொலைதூர எல்லைப் பகுதியை சென்றடைவது இனி எளிதாக இருக்கும் என்றார் அவர்.
வடகிழக்கு ரயில் முனையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரணவ் ஜோதி இதுகுறித்து கூறுகையில், இந்திய ராணுவத்துக்கு தேவையான உபகரணங்களை விரைவில் கொண்டு செல்லும் வழித்தடமாக இரட்டைப் பாலம் இருக்கும் என்று தெரிவித்தார்.
அருணாசலப் பிரதேச மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளும் கட்டமைப்புத் திட்டங்களுக்கான பொருள்களை கொண்டு செல்வதற்கும் இப்பாலம் உதவியாக அமையும் எனக்
கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.