Wednesday, 20 September 2017

பொருளாதார மந்த நிலை உண்மையே: எஸ்பிஐ ஆய்வு தகவல்

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நாட்டின் பொருளாதார நிலை சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவானது உண்மையே, தொழில்நுட்பக் காரணங்களால் இத்தகைய சரிவு காணப்படுவதாகக் கூறுவது தவறு என்பது எஸ்பிஐ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இப்போது வரை தொடரும் இந்த சரிவிலிருந்து மீள்வதற்கு அரசு அதிக அளவில் திட்டப் பணிகளுக்கு செலவிட வேண்டும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வரை இந்த சரிவு தொடர்ந்துள்ளது. இது குறுகிய காலத்திற்கான நிகழ்வு அல்ல என்றும் மாற்றத்தினால் ஏற்பட்டதும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற காரணிகளால் இது உருவாகவில்லை என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் தொடர்ந்து நிலவும் இத்தகைய சரிவு தற்காலிகமானதா அல்லது தொடருமா என்பது தெரியவில்லை.

தொடர்ந்து 6 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது. அதிலும் கடந்த காலாண்டில் மூன்று ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வளர்ச்சி 5.7 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப பிரச்சினைகளே காரணம் என்று சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது கருத்துகளை பொய்யாக்கும் வகையில் சரிவு உண்மையானது என்றும் இதற்கு தொழில்நுட்பங்களைக் காரணமாகக் கூற முடியாது என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொடர் சரிவிலிருந்து மீள்வதற்கு சரியான வழி அரசின் கையில்தான் உள்ளது. அரசின் செலவு அதிகரிக்கும்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும் என்று அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி செலவுகளை அரசு அதிகரிக்கச் செய்வதுதான் இப்போதைய சரிவுக்கு ஒரே தீர்வு என்றும் அறிக்கையில் குறி்ப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் கடன் வாங்குவது பாதிக்கப்படாத வகையில் இந்த செயல் பாடு இருக்கவேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த காலங்களில் அரசின் இத்தகைய உத்திகளை தரச்சான்று நிறுவனங்கள் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று சுட்டிக் காட்டின. மேலும் இதே நிலை தொடர்ந்தால் அரசின் கடனை திரும்ப செலுத்தும் தகுதி மதிப்பெண் குறையும் என்று எச்சரித்தன.

2008-ம் ஆண்டில் சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவியது. அதேசமயம் அரசின் செலவிடும்அளவு அதிகரித்திருந்தது. இந்த நிகழ்வுகளை தரச்சான்று நிறுவனங்கள் அதிக அளவில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

தரச்சான்று நிறுவனங்கள் அளிக்கும் மதிப்பெண்களுக்காக நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை அரசு கைவிட்டுவிட்டு பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்டச் செலவு அதிகரிக்கும்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். அரசு பத்திரங்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

குறுகிய கால நடவடிக்கைகள் சிலவற்றை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். கடன் வழங்கு அளவு அதிகரிக்கும் போது பணப்புழக்கம் அதிகரிக் கும் என்றும் கூறியுள்ளது.

1 comment:

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.