சவுபாக்யா திட்ட அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சவுபாக்யா திட்டத்தின் மூலம் நாட்டின் மின் விநியோகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் நாடெங்கிலும் 33 லட்சம் எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறிய மோடி, எல்.இ.டி மின் விளக்குகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
‘சவுபாக்யா திட்டம்’ மற்றும் அதன் இலக்குகள் குறித்த விபரங்களைத் தற்போது காண்போம்.
நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், 24 மணி நேரமும் மின் சேவை கிடைப்பதை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உறுதி செய்வதே சவுபாக்யா திட்டத்தின் முக்கிய இலக்கு ஆகும்.
இந்த திட்டத்தின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இணைப்புக் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மின் இணைப்புக் கொடுக்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் 500 ரூபாய் மின் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை 10 தவணைகளில் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்து செலுத்தலாம்.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பம் அளித்த உடனேயே மின் இணைப்புக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
16,320 கோடி ரூபாய் செலவில் சவுபாக்யா திட்டம் செயல்படுத்தப்படுகிறது
திட்டத்திற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கும். 10 சதவீதத்தை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். 30 சதவீத தொகை கடன்களாக வழங்கப்படும்.
அனைத்து பகுதிகளுக்கும் மின் சேவையை வழங்குவது சவுபாக்யா திட்டத்தின் முக்கிய இலக்காக இருந்தாலும் மண்ணெண்ணைக்கு மாற்று எரிபொருள் வழங்குவது, ஏழைகளுக்கான கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.