Thursday, 21 September 2017

நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி

🌷ஒருவர் தொழிலில் வெற்றியடைய வேண்டு மெனில் நேரத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும். எதையும் காலமறிந்து செயல்பட வேண்டும்

🌷நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. மூட்டை தூக்கும் தொழிலாளி முதல் நாட்டை ஆளும் பிரதமர் வரை எல்லோருக்கும் இயற்கை 24 மணிநேரத்தைத்தான் வழங்கி இருக்கிறது. இந்த 24 மணி நேரத்தை யாரெல்லாம் திட்டமிட்டு முறையாக செயல்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் வெற்றியைக் குவிப்பார்கள்.  நேரத்தை சரியாக கையாளாதவர்கள் வெற்றிகளைக் குவிக்க முடியாது. தோல்விகளைத் தவிர்ப்பதற்கே அவர்கள் போராட வேண்டியிருக்கும்.

🌷தொழில் செய்பவனுக்கு அதிகாலை நேரம் என்பது மிகவும் முக்கியம். சூரிய உதயத்திற்கு முன்பே விழிக்கும் பறவைக்குத்தான் உணவு கிடைக்கும் என்பது பழமொழி. தொழில் செய்பவர் இரவு 11 மணிக்குள் படுத்து உறங்கி அதிகாலை 5 மணிக்குள் எழுவது மிகவும் முக்கியம்.

🌷தொழிலுக்காக ஒதுக்கப்படும் நேரம் என்பது முன்னேற்றத்திற்கான நேரம்

🌷போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது. எனவே தொழில் செய்பவர்கள் சந்திக்க வேண்டியவர் களை காலை ஒன்பது மணிக்கு முன்பாகவே சென்று சந்தித்து விடுவது மிகவும் நல்லது. இது ஒரு தொழில் ரகசியமும் கூட.  

🌷நிறுவன பணிகள் காரணமாக சில சமயங்களில் சில சங்கடங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். தொழில்வரி, வருமானவரி, சேவை வரி, விற்பனை வரி, அரசாங்க நோட்டீஸ்கள் போன்றவற்றை முறையாகவும் சரியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

நல்ல வக்கீலை அமர்த்திக் கொண்டு சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளலாம். இத்தகைய சங்கடங்களுக்கும் நேரம் ஒதுக்கித்தான் தீர வேண்டும். வக்கீலை பார்ப்பது போன்ற  பணிகளை எல்லாம் மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

🌷வாடிக்கையாளரை மகிழ்விக்கவும் அவரிடம் நன்மதிப்பைப் பெறவும் அவருக்கு நேரம் ஒதுக்குவது அவசியம். முதன் முறையாக ஒரு வாடிக்கையாளர் உங்கள் நிறுவனத்திற்கு வருகிறார் என்றால் அவருக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
அவரிடம் நீங்கள் குறைவாகவே பேச வேண்டும். அவரை அதிகமாகப் பேசவிட வேண்டும். அங்கே நேரம் செலவாவது உங்களுக்கு வருமானம். உங்கள் தொழிலின் வளர்ச்சிக்கு அது மேலும் உதவும்.

கடிகாரத்தைப் பார்க்காமல் கனிவுடன் கண்களைப் பார்த்து பேச வேண்டும். அவர் தனது தேவைகளையும் குறைகளையும் அந்த நேரத்தில் சொல்லி விடுவதால் அடுத்த முறை அவருக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருக்காது.
இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் யாவரும் நேரநிர்வாகத்தில் கைதேர்ந்தவர்களே. எனவே தொழில் செய்பவர்கள் நேர நிர்வாகத்தில் கை தேர்ந்தால் வெற்றி உறுதி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.