Saturday, 2 September 2017

செல்லாது’ என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற மேலும் ஒரு வாய்ப்பா? மத்திய அரசு பதில்

செல்லாது’ என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பு

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி அதிரடியாக அறிவித்தார். அந்த நோட்டுகளை இருப்பு வைத்திருந்தவர்கள், வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் (சுமார் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி) வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது, ஒரு சதவீதம் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது.

அதுமட்டுமின்றி, ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தாலும், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று வெளியான தகவல், விமர்சனங்களுக்கு வழிவகுத்து விட்டது.

மத்திய அரசு பதில்

இந்த நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக்கொள்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.சி. கார்க்கிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்த தருணத்தில் அதற்கு வழியே இல்லை’’ என்று கூறினார்.

‘ஒருபோதும் கூறவில்லை’

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ‘‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சம் கோடி முதல் ரூ. 11 லட்சம் கோடி வரையில் திரும்ப வரும் என அரசு எதிர்பார்த்தது’’ என்று கூறினார். வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா, ‘‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் அவ்வளவும் திரும்ப வந்து சேர்ந்து விடும் என அரசு எதிர்பார்க்கவில்லை’’ என குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.சி. கார்க், ‘‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளில் பெரும்பாலானவை திரும்ப வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வளவும் வந்து விடுமா என்பதில் ஆளுக்கொரு மதிப்பீடுகள் இருந்தன. யூகங்கள் ஏற்பட்டன. ஆனால் அவ்வளவு நோட்டுகளும் திரும்ப வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக அரசு ஒரு போதும் கூறவில்லை. பாராளுமன்றத்திலும் சொல்லவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் குறிப்பிடவில்லை’’ என பதில் அளித்தார்.

‘சட்டப்பூர்வ பணம் அல்ல’

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் வங்கிக்கு வந்துள்ள ரூபாய் நோட்டுகள் அவ்வளவும் சட்டப்பூர்வமான பணம் என ஆக்கப்படவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தபின்னர் கருப்பு பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று யாரும் சொல்லவில்லை’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.