ஆசியாவின் பழமையான பங்குச் சந்தையான பிஎஸ்இ, சிறு நிறுவனங்களின் வர்த்தகத்துக்காக `பிஎஸ்இ எஸ்எம்இ’ என்னும் தளத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. நேற்று மூன்று புதிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்திருக்கிறது.
ஷேர் இந்தியா செக்யூரிட்டீஸ், டிரைடென்ட் டெக்ஸோபேப் மற்றும் பூஜா வெஸ்டர்ன் மெட்டாலிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ எஸ்எம்இ தளத்தில் நேற்று பட்டியலிடப்பட்டன. கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தளம் தொடங்கப்பட்டது. `பிஎஸ்இ எஸ்எம்இ ஐபிஓ’ என்னும் குறியீடு 100 புள்ளிகளுடன் தொடங்கப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் 1,490 புள்ளிகளாக முடிவடைந்தது. இந்த பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.17,268 கோடியாக இருக்கிறது. 15 மாநிலங்களில் இருந்து 20 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த பிரிவில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
நேற்று பிஎஸ்இயில் நடந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கலந்து கொண்டார். விவசாயத்துக்கு பிறகு சிறு குறு நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பினை வழங்குகின்றன. சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க பிஎஸ்இ உடன் இணைந்து செயல்பட மஹாராஷ்டிரா அரசு தயாராக இருக்கிறது என பட்நவிஸ் கூறினார்.
எஸ்எம்இ நிறுவனங்களில் முதலீடு செய்ய மஹாராஷ்டிரா அரசு ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி வரை தொகையை ஒதுக்கலாம். எஸ்எம்இ நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய் அல்லது சந்தை மதிப்பில் 15 சதவீதம் இதில் எந்த தொகை குறைவோ அந்த தொகையை மாநில அரசு முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும் என பிஎஸ்இ தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் கூறினார்.
தொடக்கத்தில் எஸ்எம்இ தளத்தில் பட்டியலிடப்பட்ட, பிறகு முக்கிய தளத்துக்கு (பிஎஸ்இ) 33 நிறுவனங்கள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.