Saturday, 7 October 2017

பொருளாதாரத்தைப் பாதித்த ஜி.எஸ்.டி!- உலகவங்கி

ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதில் ஏற்பட்ட சில இடையூறுகளாலேயே இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச பணவியல் நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்துக்கு முன்பு உலக வங்கியின் தலைவரான ஜிம் யோங் கிம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்தது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் சரிவடைந்தது. ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்த சில இடையூறுகளே இதற்கு முக்கியக் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், ஜி.எஸ்.டியால் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் வேகக்குறைவு ஒரு பிறழ்ச்சி மட்டுமே. வரவிருக்கும் மாதங்களில் இது சரியாகிவிடும். இந்தாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீராகிவிடும். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வாய்ப்புகளை மேம்படுத்தப் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்தியாவுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன. இந்தியாவில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைக் கவனித்து வருகிறோம். மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.