Thursday, 12 October 2017

அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து, 75.6 மில்லியன் முறை டிஜிட்டல் வழியில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், ‘உடனடி கட்டணச் சேவை (ஐ.எம்.பி.எஸ்), பீம், டெபிட் கார்டுகள் போன்றவற்றின் வாயிலாகக் கட்டணம் செலுத்துதல் அதிகரித்துள்ளது. இதன் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 75.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ஜூலை மாதத்தில் 69 மில்லியனாகவும், ஜூன் மாதத்தில் 65.8 மில்லியனாகவும் இருந்தது. வங்கி-வங்கி மூலமான கட்டண பரிவர்த்தனையே வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏ.டி.எம்கள் வாயிலான பரிவர்த்தனை 1.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 1.07 பில்லியனாக இருந்தது.

அதேபோல வங்கிக் கணக்குகள் மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், மொபைல் வாலட்டுகள் வாயிலான பரிவர்த்தனை ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொபைல் வாலட்டுகள் வாயிலான பரிவர்த்தனைகள் 225.4 மில்லியனாகும். ஜூலை மாதத்தில் இதன் அளவு 235.4 மில்லியனாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ரக்சா பந்தன், விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் போன்ற பண்டிகைகள் இருந்ததால் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை நிறுவனங்கள் வழங்கியிருந்தன. இதனால் டிஜிட்டல் முறையிலான பரிமாற்றம் அதிகரித்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதமும் தொடர்ச்சியாகப் பண்டிகைக் காலம் என்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.