Monday, 2 October 2017

GST குறைக்கப்பட வாய்ப்பு - ஜேட்லி

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்று நான்கு விதமாக இந்த வரி விதிக்கப்படுகிறது. சில வகையான பொருட்கள் மீது கூடுதல் இழப்பீட்டு வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் விலைவாசி உயர்ந்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர். அதே சமயம் அரசின் வருவாய் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறி இருக்கிறது.

ஏற்கனவே சில பொருட்கள் மீதான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வரி மேலும் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். இதுகுறித்து அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இந்திய வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

அரசாங்கம் இயங்குவதற்கும், அனைத்து வகையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கும் வருவாய் மிகவும் முக்கியமானது ஆகும். நாட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

அதே சமயம், அதற்கு தேவையான பணத்தை வரி மூலம் செலுத்த வேண்டிய பொறுப்பும் மக்களுக்கு இருக்கிறது. வரி வருவாய் மூலமே அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த முடியும்.

சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்ட சில மாதங்களில் வரி வருவாயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. சரக்கு சேவை வரி விகிதங்களை மாற்றி அமைப்பதன் மூலம் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது வரி விகிதங்களை குறைக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. வரி வருவாய் அதிகரிக்கும் போது வரி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.