கட்டுப்பாட்டை நீக்கியது, மத்திய அரசு நகை வாங்க ‘பான்’ எண் தேவை இல்லை
ரூ.50 ஆயிரத்துக்கு மேல், நகை வாங்க ‘பான்’ எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 1–ந்தேதி, நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நகை வாங்குபவர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவதற்கு பான் எண், ஆதார் எண் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு உருவாக்கி இருந்தது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, நகை வியாபாரிகள் சிலர், சட்டவிரோத பண பரிமாற்ற செயல்பாடுகளுக்கு துணை போவதாக புகார் வந்ததால், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப்படி, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் நிதி புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நகை வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த கட்டுப்பாடுக்கு நகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டரீதியான நகை விற்பனையும் பாதிக்கப்படும் என்று கூறினர்.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குபவர்கள், இனிமேல் பான் எண்ணை தெரிவிக்க வேண்டியது இல்லை. அவர்களைப் பற்றிய விவரங்களை நகை வியாபாரிகள், நிதி புலனாய்வு பிரிவுக்கு அளிக்க வேண்டியது இல்லை.
இதுபோல், ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நகை வியாபாரிகளை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது.
ஒன்றரை கோடி ரூபாய்வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.75 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே ‘காம்போசிசன்’ திட்டத்தின் கீழ் வரி செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், ரூ.1 கோடிவரை வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர நிறுவனங்களும் ‘காம்போசிசன்’ திட்டத்தில் வரி செலுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் நடைமுறை சிக்கல் இல்லாமல், 1 முதல் 5 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.
பரவலாக பயன்படுத்தப்படும் 27 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டது. இதன் விவரம் வருமாறு:–
பிராண்டட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், அறுத்து காய வைக்கப்பட்ட மாங்காய் ஆகியவற்றுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கையால் உருவாக்கப்பட்ட நூலுக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு.
எழுது பொருட்கள், மார்பிள், கிரானைட் தவிர, தரையில் பதிக்கப்படும் கற்கள், டீசல் என்ஜின் பாகங்கள், குழாய் பாகங்கள் ஆகியவற்றுக்கான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு. மின்னணு கழிவு பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு. ஜாப் ஒர்க், கவரிங் நகைகள், உணவு பொருட்கள், அச்சு பொருட்கள் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் அரசு ஒப்பந்த பணிகளுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
கேஸ் ஸ்டவ் உள்பட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து சலுகை.
ஏ.சி. உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதம், 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கைவினை பொருட்களுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்த பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அருண் ஜெட்லி கூறியதாவது:–
ஏற்றுமதியாளர்களுக்கு ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான வரி ரீபண்ட் 18–ந்தேதிக்குள் வழங்கப்படும். ஏற்றுமதியாளர்கள், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல், மின்னணு முறையில் (இ வாலட்) கணக்கு தாக்கல் செய்யலாம். பெரிய அளவில் வரி செலுத்துபவர்கள், வழக்கம்போல் மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.