Thursday, 12 October 2017

எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன? - ராகேஷ் தப்புடு

பணமில்லாப் பொருளாதாரத்தை உருவாக்குவது பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கங்களுள் முக்கியமான ஒன்றாக இருப்பதாக மத்திய அரசு பல நிகழ்வுகளில் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களின் செயலாளர்களுடன் அண்மையில் பிரதமர் மோடி கலந்துரையாடுகையில், “பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு பணத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இருந்த விகிதம் 12 சதவிகிதமாக இருந்தது. பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு இவ்விகிதம் 9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்று பேசியிருந்தார். ஆனால், பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்புதான் என்ன?

ஒவ்வொரு வாரமும் ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரையில், புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளும், பொதுமக்களிடத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன் இருந்த அளவில் 88 சதவிகிதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

வாரவாரம் ரிசர்வ் வங்கி வெளியிடும் வாராந்திர புள்ளி விவர அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் சொத்துகள், பொறுப்புகள், அந்நிய செலாவணி இருப்பு, பட்டியலிடப்பட்ட வணிக வங்கியின் தொழில், பண இருப்பின் அளவு, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு உள்ளிட்டவை அடங்கிய பல தகவல்கள் வெளியிடப்படும்.

ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி, புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள், ரூபாய் நாணயங்கள், சிறிய நாணயங்கள் ஆகியவை ஒன்றாகச் சேர்த்தே புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு கணக்கிடப்படுகிறது. புழக்கத்தில் இருக்கும் பணத்திலிருந்து வங்கிகளிடமிருக்கும் பணத்தைக் கழிப்பதன் மூலம் பொதுமக்களிடம் இருக்கும் பணத்தின் அளவு கணக்கிடப்படுகிறது.

பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நவம்பர் 4, 2016 வரையில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 17.97 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதால், புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. ஜனவரி 6, 2017 அன்று இதன் மதிப்பு 8.98 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது.

2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிவடைந்துள்ளது இதுவே முதன்முறையாகும். புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமானதால் ஜனவரி மாதம் முதல் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் மதிப்பு ஜூன் மாதத்தில் 15 லட்சம் கோடியைக் கடந்தது. செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இந்த மதிப்பு 15.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன் இருந்த 88 சதவிகிதத்தை விடச் சற்று அதிகமாகும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன், புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பில் பொதுமக்களிடம் இருந்த பணத்தின் விகிதம் 95.7 சதவிகிதமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், 95.7 ரூபாய் மக்களிடமும், 4.3 ரூபாய் வங்கிகளிடமும் இருக்கிறது.

இந்த மதிப்பு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் (பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்படத் தொடங்கிய பின்) 76.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. புதிய நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த பின் ஜனவரி மாதத்தில் இந்த விகிதம் 90 சதவிகிதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 95 சதவிகிதமாகவும் அதிகரித்துவிட்டது.

பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையின் மதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு (நவம்பர் 11, 2016ஆம் தேதியின் கணக்குப்படி) வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சுமார் 108 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த மதிப்பு மார்ச் 31, 2017 அன்று (பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்துவதற்கான கடைசி நாள்) 115.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.

பிறகு, வங்கிகளில் செலுத்தப்படும் தொகையின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தின் இடையில் 114.5 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்திருந்தது. 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துக்கும் 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், டைம் டெபாசிட்டுகளில் 4.5 லட்சம் கோடி ரூபாயும், டிமாண்ட் டெபாசிட்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாயும் அதிகரித்துள்ளது.

நன்றி: ஃபேக்ட்லி

தமிழில்: அ.விக்னேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.