Saturday, 14 October 2017

ஏற்றுமதி உயர்வு! வர்த்தகம் குறைவு!

அனைத்து முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியும் செப்டம்பர் மாதத்தில் 25.67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'பொறியியல் சாதனப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய 10 பொருட்கள் தான் ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. தொடர்ந்து 13 மாதங்களாக ஏற்றுமதி வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பொருட்களின் அளவு அதிகரித்து வந்தாலும், அதன் வர்த்தக வளர்ச்சி மதிப்பு குறைவாகத் தான் உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதி அளவு 25.67 சதவிகிதம் அதிகரித்தாலும், வர்த்தகத்தின் மதிப்பு 0.95 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட 8.98 பில்லியன் டாலர் மட்டுமே ஏற்றுமதி அதிகரித்துள்ளது (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இறக்குமதியைப் பொறுத்தவரையில் செப்டம்பர் மாதத்தில் 18.09 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 37.59 பில்லியன் டாலர் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.’

இதுபற்றி இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் டி.எஸ்.பாஷின் கூறும்போது, "சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும்" என்றார். பொறியியல் சாராத பொருட்களின் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டுடன் (2016) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 18.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.