Friday, 25 August 2017

30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க..!

ஒரு மனிதன், தன் வாழ்க்கையில் பணத்திற்காக ஓடும் காலம் 30 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில் தான். இந்த முக்கியமான நேரத்தில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவும் முக்கியமோ அதைவிட அதனை சரியான வகையில் சேமிக்க திட்டமிடல் மிகவும் அவசியம். இக்கால கட்டத்தில் நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதே தான் இங்கு பார்க்க போகிறோம்.
தனிநபரின் நிதி நிலை தன்னை மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தையும் சார்ந்துள்ளதால் நிதி தொடர்பான விஷயங்களை உடனுக்குடன் திட்டமிடுதல் அவசியம்.
நிதிநிலை மோசமாகும் முன் நிதித் திட்டமிடுதலில் அதிகம் கவனம் செலுத்தினால் நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினரையும் நிதி சார்ந்த பிரச்சனையில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

அனுபவம்
ஒவ்வொரு தனிமனிதனுக்குமான நிதித் தேவைகளும், செலவு செய்யும் பழக்கம் மாறுபடுவதால், இது போன்ற நிதித் திட்டமிடுதல் நம் வாழ்வில் கிடைக்கப்பெறும் அனுபவத்தைப் பொறுத்தே கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
  

ரிஸ்க் டூ ரஸ்க் வரை..
30 வயதுகளில் உள்ள தனிநபர்கள் நிதி நிலைமையில் ஓரளவு நிலையானவர்களாகவும், ரிஸ்க் எடுத்தால் எதிர்வினைகளை தாங்கிக்கொண்டு மீண்டு வரும் திறன்கொண்டவர்களாகவும் இருப்பதால், அவர்கள் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

  

பணவீக்கம்
எந்த நிலையிலும் கண்மூடித்தனமாக முதலீடு செய்ய வேண்டாம். முதலீடு செய்யயும் முன் பணவீக்க விகிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் அதனை உங்களுடைய நிதி தொடர்பான குறிக்கோள்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
எடுத்துக்காட்டாக, உங்களுடைய பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தால் மட்டும் மிகப்பெரிய லாபத்தை அடைந்திட முடியாது.
முதலீடு செய்வதால் மட்டுமே அதிகளவு இலாபத்தை திரும்பப் பெற முடியும். எனினும், இவற்றிலும் கூட ஆபத்துகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  

ஓய்வு காலத்திற்கான முதலீடு
நீங்கள் இதுவரையிலும் ஓய்வு காலத்திற்காகத் திட்டமிடாமல் இருந்தால், மேலும் தாமதிக்க வேண்டாம். ஓய்வு காலத்திற்காகச் சேமிப்பது முதலீடு செய்வதில் முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாகும்.

  

தொழில்நுட்பத்தின் உதவி
30 வயதுகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களாகவும், தானாகவே சந்தா செலுத்தி முதலீடு செய்வதைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
அதாவது, பரஸ்பர நிதி, SIP, தொடர் வைப்பு கணக்குகள் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் அதிகளவில் சேமித்திட முடியும்.

  

ஆயள் காப்பீடு
நீங்கள் இல்லாத நாட்களிலும் கூட உங்களுடைய குடும்பத்திற்கு உதவி தேவைப்படும், அதற்கான வழி தான் ஆயுள் காப்பீடு.
சரியான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யும் போது உங்களுடைய வரிகளை சேமிக்க உதவுவதுடன், ஆபத்துக் கால செலவுகளையும் சேமித்திடும்.

  

வீட்டுக் கடன்
நீங்கள் அதிகமாக வரி செலுத்தும் நிலையில் இருந்தால், உங்களுடைய வீட்டுக் கடன் மூலம் பெருமளவு வரிப் பணத்தை சேமித்திட முடியும். இதன் மூலம் சொந்தமாக வீடு வாங்குவதும் நடக்கும் என்பது போனஸ்!
  

அவசர கால நிதி
எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகள் உங்களுடைய நீண்ட நாள் சேமிப்பைப் பதம் பார்க்காமல் இருக்க விரும்பினால், அவசர கால நிதியை நீங்கள் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவசர கால நிதி இல்லாத போது, உங்களுடைய வைப்பு நிதியையோ அல்லது எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்துள்ள நிதியையோ அது முடிவடையும் காலத்திற்கு முன்னதாகவே எடுத்து செலவு செய்யும் சூழ்நிலைக்கு நீங்கள் சந்திதக்க வேண்டிய நிலை உருவாகும்.

  

உயில்
இந்த வயதிலேயே உயிலை எழுதி வைப்பது மிகவும் முன்னதாகவே செய்யக் கூடிய செயலாக நீங்கள் நினைக்காலாம். ஆனால், வாழ்க்கை நிலையில்லாதது, எப்பொழுது என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
  

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.