பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு மீண்டும் முழுமையான அதிகாரத்தை வழங்கி பழைய நிலையிலேயே அவர் பணியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயசந்திரன் பிரதீப் யாதவின் கீழ் செயல்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பதவியின் அதிகாரத்தைப் பறித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
உதயசந்திரனை பள்ளிக்கல்வி செயலாளர் பதவியிலிருந்து நீக்க தமிழக அரசு முயற்சி எடுத்த போது மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவைச் சுற்றி வளைத்து மீறும் வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு முதன்மைச் செயலாளர் ஒருவரை நியமித்து உதயசந்திரனின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சிறப்பாக ஒரு துறை செயல்பட்டதென்றால் அது பள்ளிக் கல்வித்துறை மட்டுமே, கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத பள்ளிக் கல்வித்துறையை 5 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து அத்துறைக்கு புத்தொளி கொடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் உதயசந்திரன்.
ஊழலில் ஊறியிருந்த பள்ளிக் கல்வித்துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் தேவையென நடவடிக்கை எடுத்த உதயசந்திரனை தனது ஆட்சியை தக்கவைக்க பல தில்லுமுல்லுகளை செய்து ஆட்சியில் தொடரும் எடப்பாடி பழனிசாமி அரசு இதுபோன்ற ஒரு திறமையான நேர்மையான அதிகாரியின் அதிகாரத்தைக் குறைந்துள்ளது கண்டனத்திற்குரியது.
பள்ளிக் கல்வித்துறையில் உதயசந்திரனின் அதிகாரத்தை குறைத்திருப்பது பள்ளிக்கல்வித் துறைக்கு ஒர் பேரிழப்பாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு மீண்டும் முழுமையான அதிகாரத்தை வழங்கி பழைய நிலையிலேயே அவர் பணியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.