Tuesday, 29 August 2017

ஜி.எஸ்.டி-யால் கேள்விக்குறியாகிறதா இந்தியப் பொருளாதாரம்?- vikatan 

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு புதிய சுதந்திரத்தை அளித்துவிட்டதாக இந்திய பிரதமர் மோடி பெருமிதம்கொண்டார். ஜி.எஸ்.டி (GST) வரி மசோதாவை அமல்படுத்தியதே அது. ஜி.எஸ்.டி மூலம் இந்தியா ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தையாக மாறும் என்பது, அதன் பிரசார மந்திரமாக அமைந்தது. 

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், ஜி.எஸ்.டி வரிமுறை, குறுகியகாலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் ஜி.டி.பி-யைக்கொண்டே அளவிடப்படுகிறது. அதன்படி ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது குறைவாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

ஏற்கெனவே 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாப் பணமாக்கிய நடவடிக்கையால், நிதி ஆண்டு 2017-ன் நான்காம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி சரிவைக் கண்டது. ஒட்டுமொத்தமாக நிதி ஆண்டு 2017-ம் ஆண்டில் 7.1 சதவிகித வளர்ச்சியை அடைந்த இந்திய ஜி.டி.பி, நான்காம் காலாண்டில் 6.1 சதவிகிதமாக மட்டுமே பதிவாகியிருக்கிறது. 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையானது உயர்ந்திருக்கிறது. இதனால் வாங்கும் திறனற்ற மக்கள் பெரும்பாலான நுகர்வைக் குறைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தை முறைப்படுத்தப்படாத சந்தையாகவே இருந்துவந்திருக்கிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியின் கீழ் தொழில்கள் அனைத்தும் வரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. 

தொழில்களை மேலும் எளிமையாக்கவே ஜி.எஸ்.டி வரி மசோதா அமல்படுத்தப்பட்டது. சரக்கு வர்த்தகமும், போக்குவரத்தும் நாடு முழுவதும் தங்குதடையின்றி செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வரி மசோதா திட்டமிடப்பட்டது. ஆனால், “குறுகிய காலத்தில் அதன் முழுமையான பலனை இந்தியப் பொருளாதாரம் அடைய வாய்ப்பில்லை'' என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

ஜி.எஸ்.டி வரி வெற்றிகரமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுவிட்டாலும், இன்னும் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து தீர்வு காணப்படவில்லை. ஜி.எஸ்.டி வரியின் கீழ் அனைத்து மதிப்பீடுகளும் கணக்கீடுகளும் மாறியிருப்பதால், அவற்றை நிர்வகிப்பதற்கான எளிமையான வழிமுறைகள் இன்னமும் திட்டமிடல்களிலேயே நீடித்துக்கொண்டிருக்கின்றன. ஏன் இந்த ஜி.எஸ்.டி வரியின் கீழ் ஜி.டி.பி-யைக் கணக்கிடுவதிலும் சிக்கல் உண்டாகியுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 

இந்தியப் பொருளாதாரம், குறுகியகாலத்தில் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தலால் தாக்கத்துக்குள்ளாகியிருப்பது பங்குச்சந்தையிலும் எதிரொலிப்பதாகத் தெரிகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து ஜூலை மாதம் வரையில் 23 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது இந்திய பங்குச்சந்தை. ஆனால், இதுவரை வேகமாக ஏற்றம் கண்டுவந்த சந்தை, இப்போது இறக்கத்தைச் சந்தித்துவருகிறது. ஜூலை மாதத் தொடக்கத்தில் நிஃப்டி 10 ஆயிரத்தைத் தாண்டி வர்த்தகமாகிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது, 9,900 என்ற நிலையிலேயே இருக்கிறது. 

மேலும் 2017-18 நிதி ஆண்டில் நிஃப்டி 50-ல் உள்ள நிறுவனங்களின் வருமானம் 1.5 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் காலாண்டில் 8.4 சதவிகித வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. குறைவான நிறுவனங்களே சிறப்பாகச் செயலாற்றியிருக்கின்றன. மேலும், இந்த நிதி ஆண்டில் நிறுவனங்கள் தங்களின் மூலதனத்திலிருந்து திரும்பப் பெறும் வருமானம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என்றும் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

துறை வாரியாகப் பார்க்கும்போதும் வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பார்மா உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. மொத்தமாகவே இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சற்று தடுமாற்றத்தில்தான் தற்போது இருக்கிறது. இதனால் பாசிட்டிவாக இருந்துவந்த இந்தியச் சந்தைகள் மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வை, தற்போது தடுமாறத் தொடங்கியுள்ளது. ஜூன் மாதத்தைத் தொடர்ந்து ஜூலை மாதத்திலும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்திருக்கின்றன. ஜூலை மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து 2,461 கோடி ரூபாயாக மட்டுமே பதிவாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் வெளிநாட்டு முதலீடுகள் தோராயமாக 1,500 கோடி ரூபாயாக வெளியேறியிருக்கிறது. 

விரைவில் ஜி.எஸ்.டி வரியில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, சில பொருள்கள் மற்றும் சேவைகளின் வரியைக் குறைத்தால் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் தனது வளர்ச்சிப் போக்கை ஏற்றத்தின் பக்கம் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். இது, முழுமையாக அரசின் கையில்தான் இருக்கிறது. அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் மட்டும் அதிகரித்துவிட்டால் போதாது, வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.