மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல், பாரம்பரிய விதைகள், இடு பொருட்கள் ஆகியவற்றின் மூலம் விளையும், இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனைக்கு, தனி சந்தையை ஏற்படுத்த வேண்டும்,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்து ஆய்வு செய்யும், தேசிய கவுன்சில், ‘இந்தியாவில் இயற்கை விவசாயம்’ என்ற ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. இதை வெளியிட்டு, அமிதாப் காந்த் பேசியதாவது: இந்தியாவில், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவை, இயற்கை விவசாயத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மழை பொழிவு அதிகம் உள்ள, மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களிலும், ரசாயன உரங்கள் குறைவாக பயன்படுத்தப்படும், கிழக்கு பகுதிகளிலும், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இயற்கை விவசாயத்தில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இத்துறை வளர வேண்டும் என்றால், அரசை ஒதுக்கிவிட்டு, தனியார் துறையினர் களத்தில் இறங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண் முறையில் உருவாக்கப்பட்ட விதைகள், ரசாயன கலப்பில்லாத உரங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்திலும், விற்பனையிலும் ஈடுபட வேண்டும். ஒருசில விவசாய குழுக்கள், இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
இதில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், சிறந்த தரமான விளை பொருட்களை உருவாக்க முடியும். விளை பொருட்களின் தரம் சிறப்பாக இருந்தால், இயற்கை விவசாயத் துறை சீரிய வளர்ச்சி காணும்.தற்போது உள்ள சந்தை முறை தான், இயற்கை விளை பொருட்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இச்சந்தைகளில் விற்கப்படும் விளை பொருட்களை, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை எனக்கூறி, ஏமாற்றுவது நடக்கிறது. அதனால், இயற்கை விளை பொருட்களுக்கு என, தனி சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். அது, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும்.
இயற்கை வேளாண் பொருட்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைய விதிமுறைகள் இல்லாததால், அவற்றின் விற்பனையில் மோசடி நடக்கிறது. இதை தடுக்க, இயற்கை விளை பொருட்களுக்கு, ஒரே சீரான தர நிர்ணய நடைமுறை தேவை. இவ்வகை பொருட்களுக்கு என, தனி முத்திரை, ‘பேக்கேஜிங்’ மற்றும் மோசடிக்கு தண்டனை வழங்கும் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய விதிகளின்படி, தற்போது, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே விதிகளை, இயற்கை வேளாண் பொருட்களின் உள்நாட்டு விற்பனைக்குக்கு பின்பற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.