இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நந்தன் நிலகேணி தலைவர் பொறுப்பை நேற்று ஏற்றார். இவரது தலைமையிலான முதல் இயக்குநர் குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த நிலகேணி, தலைமைச் செயல் அதிகாரியை தேடும் பணியினை தொடங்கி இருக்கிறோம். எகோன் ஸென்டெர் (Egon Zender) என்னும் நிறுவனத்தை இதற்காக நியமனம் செய்திருக்கிறோம். பலரது விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன என்று கூறினார்.
இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நந்தன் நிலகேணி கூறியதாவது: எவ்வளவு காலம் தலைவராக இருக்க வேண்டும் என்பது குறித்து நிர்ணயம் செய்யப்படவில்லை. நிறுவனத்துக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நாள் இருப்பேன். முதலில் நிறுவனத்தில் நிலைத்தன்மையை உருவாக்குவது அவசியம். தனக்கு தலைமைச் செயல் அதிகாரி ஆகும் எண்ணம் இல்லை. எதிர் கால வாய்ப்புகள் மற்றும் வாடிகையாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்த உள்ளேன்.
தலைவராக பொறுப்பேற்று 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதனால் தற்போதைய சூழலில் நிறுவனத்தின் உத்தி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்து ஏதும் கூற இயலாது. வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயங்களை பற்றி பேசலாம். தற்போது நிறுவனத்தில் ஸ்திரத் தன்மையைக் கொண்டு வருவது முதல் பணியாகும். மூர்த்திக்கும் இதர நிறுவனர்களுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு இருக்கிறது. நிறுவனத்தில் இருவேறு கருத்துகள் இருக்கவில்லை. இயக்குநர் குழுவால் நடத்தப்பட்டு வரும் நிறுவனம் இன்ஃபோசிஸ், நிறுவன விதிமுறைகளை சரியான பின்பற்றும் நிறுவனம் இது. பழைய நிலைமைக்கு நிறுவனம் மீண்டு வரும்.
புதிய சிஇஓ நிறுவனத்துக்கு வெளியே இருந்தோ அல்லது நிறுவனத்துக்குள் இருந்தோ வரலாம். சிஇஒ நியமனம் செய்யும் அதே வேளையில் இயக்குநர் குழுவை மாற்றி அமைக்கும் பணியும் இணையாக தொடரும். மேலும், அனைத்து பங்குதாரர்கள், பணியாளர்கள் சார்பாக இங்கு செயல்படுவேன். ஏற்கெனவெ கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க உள்ளேன் என்றார். தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என உங்களை முதலில் அணுகியது யார் என்னும் கேள்விக்கு, அதற்கான விடை என்னுடைய நாவலில் கிடைக்கும் என நகைச்சுவையாக நிலகேணி கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.