புதுடெல்லி: ஜிஎஸ்டியில் சிமென்ட், பெயின்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், 28 சதவீதத்தில் உள்ள சில பொருட்களுக்கான வரி மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் ் மேலும் சில பொருட்களுக்கு வரிகள் மாற்றி அமைக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த ஓராண்டில் வரி விதிப்பு, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் உட்பட பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. தொழில்துறையினர் மற்றும் மாநிலங்கள் கோரிக்கைகளுக்கு சில பொருட்களுக்கு வரி விலக்குகளும், பல பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்துக்கும் குறைக்கப்பட்டன. கட்டுமானத்துறை மிகவும் மந்த நிலையில் உள்ளது. இந்த துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல் கட்டமாக இந்த துறை சார்ந்த பொருட்களுக்கு வரி குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிமென்ட், பெயின்ட் ஆகியவை தற்போது 28 சதவீத வரி விதிப்பில் உள்ளன. இவற்றை குறைந்த வரி பிரிவுக்கு மாற்றுவதற்கு பரிசீலனை செய்து வருகிறோம். இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஜவுளித்துறை போன்றவற்றில், மூலப்பொருட்களின் மீதான வரிகள், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட அதிகமாக உள்ளன. இதனால், கூடுதலாக செலுத்திய வரியை ரீபண்ட் பெற வேண்டி உள்ளது. ஆனால், வரிகள் முழுமையாக ரீபண்ட் செய்யப்படாததால் ஜவுளித்துறையினர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டபோது. 176 பொருட்கள் 28 சதவீத பிரிவில் இருந்து 18 சதவீதத்துக்கு மாற்றப்பட்டன. அப்போதே, சிமென்ட் மீதான வரியை குறைக்க பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் வரி வருவாய் 20,000 கோடி குறைந்தது. இதனால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து நடைபெறும் கூட்டத்தில் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.ஜிஎஸ்டிக்கு வயது 1ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வந்தது. நாளையுடன் இதற்கு ஓராண்டு நிறைவடைகிறது. இதில் மத்திய, மாநில வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 5, 12, 18, 28 என வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாட இருக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.