Monday, 25 June 2018

கறிக்கோழி நுகர்வு 20% அதிகம் விலை உயர்ந்தது

கோவை: ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு மற்றும் கோடையின் தாக்கத்தால் கறிக்கோழி நுகர்வு 20 சதவீதம் குறைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்த மாதத்தில் நுகர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் தைப்பூச விரதம், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலவும் கோடை காரணமாக கறிக்கோழி நுகர்வு குறையும், ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காரணமாக நுகர்வு அதிகரிக்கும், ஜூன், ஜூலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு, ரம்ஜான் நோன்பு காரணமாக நுகர்வு குறையும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் நுகர்வு நிலையாக இருக்கும், நவம்பரில் பண்டிகை காரணமாக அதிகரித்தும், டிசம்பரில் அய்யப்ப சீசன் காரணமாக நுகர்வு குறையும் இவ்வாறு ஆண்டில் 6 மாதங்கள் ஏற்றமாகவும், 6 மாதங்கள் இறக்கமாகவும் இருக்கும். இதன்படி, ஜூன் மாதம் நுகர்வு குறையும் என்ற எதிர்பார்ப்பில் கறிக்ேகாழி உற்பத்தியாளர்கள் 20 சதவீதம் உற்பத்தியை குறைத்தனர். ஆனால், கடந்த 2 வாரமாக விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் கறிக்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூனில் பண்ணை கொள்முதல் மொத்த விலை ஒரு கிலோ உயிருடன் ₹70க்கு விற்றது. சில்லரை விற்பனையில் உரித்த கறிக்கோழி கிலோ ₹150க்கு விற்றது. இந்த ஆண்டு இம்மாதத்தில் பண்ணை கொள்முதல் மொத்த விலை உயிருடன் கிலோ நேற்று ₹100ஐ எட்டியுள்ளது. இதனால் சில்லரை விற்பனை நிலையங்களில் உரித்த கறிக்கோழி கிலோ ₹200க்கு விற்கப்படுகிறது. நுகர்வு அதிகரிப்பிற்கு காரணம், கடந்த 2 வாரமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மற்றும் கேரளாவில் நிலவும் மழை, மேகமூட்டம், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஆகியவையாகும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இதே சீதோஷ்ண நிலை நீடிக்காவிட்டாலும், கோவை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கறிக்கோழி நுகர்வு அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.