Wednesday, 13 June 2018

நேரம் காட்டி...அதுதான்க கடிகார கடைகளின் இறுதி நாட்கள்...

அனைத்து தரப்பினரிடையேயும் கைக்கடிகாரத்துக்கு எப்போதுமே மவுசு உண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் விதவிதமான கைகடிகாரங்களை தயாரிக்கின்றன. குழந்தைளுக்கு கூட கைக்கடிகாரம் பல்வேறு வகையான மாடல்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆன் லைன் வர்த்தகத்தில் அதிகமாக விற்பனையாகும் பொருட்களின் பட்டியலில் கைக்கடிகாரம் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கைக்கடிகாரங்களின் விலை அதிக அளவில் இருந்தது.. இதனால் பழுது ஏற்பட்டால் அதனை தூக்கிப்போட்டு விடாமல் பழுது நீக்கி பயன்படுத்தினர். இந்த தொழிலை நம்பி, தமிழகத்தின் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை கைக்கடிகாரம் ரிப்பேர் செய்யப்படும் கடைகள் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்டன. இதேபோல் புதிய கைக்கடிகாரங்களின் விற்பனையும் செய்யப்படும் சில்லரை கடைகளும் பிரத்யேகமாக இருந்தது. குறிப்பாக கடிகாரத்தில் பேட்டரி மாற்றுதல், ஸ்டிராப், கடிகார முள் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உலகமயமாக்கல், தொழில்நுட்பம், நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகளால் கைக்கடிகாரங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி புற்றீசல் போல் ஏராளமான நிறுவனங்களும் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்தன. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதுப்புது மாடல்களில் விதவிதமான வண்ணங்களில் தயாரிப்புகளை மாற்றிக்கொண்டே இருந்தன. இதனால் வாடிக்ககையாளர்கள் கை கடிகாரம் பழுது ஏற்பட்டால் அதனை தூக்கிப்போட்டு விட்டு, புதிய கடிகாரங்களை வாங்கி பயன்படுத்த துவங்கினர். மேலும் பழுது ஏற்பட்டால், பழுது பார்க்கவும் பிரத்யேக கம்பெனி ஷோரூம்களையும் துவக்கின. இதனால் பழுது நீக்கும் சிறிய கடைகளுக்கு செல்வதை வாடிக்கையாளர்கள் முற்றிலும் நிறுத்தி விட்டனர். இதனால் வருவாய் குறைந்து தொழில் நஷ்டமடைந்ததால் சிறிய நகரங்களில் தற்போது பழுது நீக்கும் கடைகளை பலர் மூடிவிட்டனர். இந்த கடைகளை நடத்தி வந்தவர்கள் நகர் பகுதியில் மாற்று பணிக்கு சென்று விட்டனர். அவர்கள் கடைகள் நடத்தும்போது இருந்த பொருட்களை வேறு வழியின்றி பழைய இரும்புக் கடைகளில் விற்பனை செய்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் வரத்தகம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் போட்டியால் உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் தொழில் நஷ்டமடைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.