ஈரோடு மாட்டுச்சந்தைக்கு நேற்று கர்நாடக விவசாயிகள் அதிகளவில் வந்து கறவை மாடுகள் வாங்கிச்சென்றனர். தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இருந்து அதிகளவில் கறவை மாடுகளை வாங்கிசெல்வதற்காக மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் வருகின்றனர். இந்த சந்தையில் விற்கப்படும் செவலை, எச்எப்., எச்எப்., கிராஸ், சிந்தி, ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள் இந்த மாநிலங்களின் சீதோஷ்ணநிலையை தாங்கி வளர்வதுடன், கறவைத்திறனுடன் திகழ்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு 7 மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் கறவை மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்குவதற்காக ஈரோடு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் 375 கறவை பசு மாடுகளும், 300 எருமை, 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை வாங்கி செல்வற்காக நேற்று அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் மாட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்குவதற்காக வருகை தந்திருந்தனர். தற்போது கர்நாடகாவில் மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வருவதால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். தாராளமாக பசுந்தீவனம் கிடைப்பதால் அங்கிருந்து கறவை மாடுகளை வாங்கி செல்வதற்காக வியாபாரிகளும், விவசாயிகளும் அதிகளவில் வந்துள்ளனர். இதனால் நேற்று மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறும்போது, இன்று ஒரேநாளில் கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு தலா 15 லோடு, தெலங்கானாவிற்கு 10 லோடு மாடுகளும் சென்றன. இதுபோக மற்ற மாநிலங்களுக்கும் அதிகளவில் மாடு லோடு சென்றது. ஒரேநாளில் 95 சதவீத மாடுகள் விற்பனையானது. பசுந்தீவனத்தட்டுபாடு நீங்கியதால் பரவலாகவே மாடுகளை வாங்கி செல்வதற்காக அதிகளவில் மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் வந்ததால் விற்பனை அமோகமாக இருந்தது என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.