தமிழகத்தில் பல்வேறு வகை பூக்கள் உள்ள நிலையில் அதிக வருவாய் தரும் பயிராக முல்லை பூ உள்ளது. இதில் ஆம்பூர் முல்லை, பச்சை முல்லை, கூர்முனை முல்லை, நீண்ட வட்ட முல்லை என பல வகைகள் முல்லை பூக்கள் உள்ளன. இருப்பினும், விவசாயிகள் அதிக அளவில் பயிரிட விரும்பும் பூவாக ஆம்பூர் முல்லை விளங்குகிறது. இந்த ஆம்பூர் முல்லை ஒருமுறை நடவு செய்தால் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து பராமரித்து லாபம் ஈட்ட முடியும். நட்ட மூன்றாவது மாதத்தில் இருந்து அதிக விளைச்சலுடன் கூடுதல் லாபம் தர கூடியதாக இந்த முல்லை உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், உம்ராபாத், மாதனூர், ஆசனாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் முல்லை பூ பயிரிடப்பட்டு வருகிறது. வைகாசி மாத துவக்கம் முதல் முல்லை பூ விளைச்சல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை காரணமாக பூ விளைச்சல் மேலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, விஜயவாடா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, தும்கூரு, மைசூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இந்த பகுதிகளில் கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 டன் முல்லை பூ வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வரும் ஆனி மாதத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகைகள் அதிகம் இருப்பதால் இந்த பூவிற்கு அதிக விலை மற்றும் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மற்றும் மலர்வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.