Friday, 29 June 2018

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது

புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்கள், வருமான வரி நோட்டீசில் இருந்து தப்ப தங்கள் பாஸ்போர்ட்டில் முகவரியை மாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதன்படி அங்கு இந்தியர்கள் செலுத்திய வரி. வருவாய் விவரங்கள் தானாக பகிர்ந்து கொள்ளப்படும். பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்களே அதிகம் இருந்தன. இதன் அடிப்படையிலும், வெளிநாடுகள் பகிர்ந்த வருவாய் விவரங்கள் அடிப்படையிலும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு சம்மன், வருமான வரி நோட்டீஸ் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்ப, வெளிநாடு வாழ் இந்தியர்கள் புது உத்தியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, தங்கள் பாஸ்போர்ட்டில் இந்திய முகவரிக்கு பதிலாக, வெளிநாட்டில் தாங்கள் வசிக்கும் முகவரியை மாற்றி வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து அங்குள்ள வங்கிக் கணக்குகளிலும் முகவரி மாறி விடுகிறது. இந்திய முகவரியாக இருந்தால் மட்டுமே வங்கிகள் பரிவர்த்தனை விவரங்களை தானாக இந்தியாவுக்கு அனுப்பும். ஆனால், வெளிநாட்டு முகவரியை மாற்றும்போது, அந்த நபர் அந்த நாட்டில் வரி செலுத்தும் ஒருவராக கருதப்படுகிறார். அவரது விவரங்கள் வசிப்பிட முகவரி உள்ள வெளிநாட்டு அமைப்புகளுக்கே பகிரப்படும். ஒரு போதும் தானாக இந்தியாவுக்கு வராது. வங்கிகளும் இவற்றை பகிர வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் பெயர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நிறுவனங்கள், வெளிநாட்டு அறக்கட்டளைகள் முகவரியை மாற்றி விடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வருவாய் விவரங்களை தானாக பகிர்வதில் இருந்து தப்பும் வழியாக இது அமைந்து விடுகிறது. இதுகுறித்து அதிகாரி கூறுகையில், ‘‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு வரி செலுத்துவதால், அந்த நாட்டின் வரி செலுத்தும் குடிமகனாக ஆகிறார். அவர் தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொள்வதால் தானியங்கி முறையில் தகவல்கள் பகிரப்படாது. இவ்வாறு வரி செலுத்தும் குடிமகனாக தங்களை டையாளப்படுத்திக் கொள்ள பாஸ்போர்ட், அடையாளச்சான்று, ஓட்டுநர் உரிமம் கிரெடிட் கார்டு போன்றவற்றில் மாற்றினால் போதும்’’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.