Tuesday, 26 June 2018

நடப்பாண்டு முதல் சீசன் துவக்கத்தில் இருந்தே மாம்பழம் விலை குறையவில்லை.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. இப்பகுதிகளில் நடுசாலை, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, குதாதத், மல்கோவா, குண்டு உள்பட பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் களைக்கட்டும். நடப்பாண்டு சேலம் மார்க்கெட்டுக்கு ஏப்ரல் முதல் தேதியில் 5 முதல் 6 டன் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது. அதன்பின் மே 25ம் தேதிக்கு மேல் மார்க்கெட்டுக்கு மாம்பழம் சற்று அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஜாதிரக மாம்பழம் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் மாம்பழத்தில் கடைசி ரகமான கிளிமூக்கு, நீலம் மாம்பழம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ரக மாம்பழம் இம்மாதம் கடைசி வரை இருக்கும் என மாம்பழ வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் கடைவீதி மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் 50க்கும் மேற்பட்ட மொத்த மாம்பழ வியாபாரிகள் உள்ளன. நடப்பாண்டு மார்ச் கடைசியில் மாம்பழ சீசன் தொடங்கிய போது, 4 முதல் 5 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்தது. ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல் வரத்து 10 டன்னாக உயர்ந்தது. அதன்பின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. மே கடைசி வாரம், ஜூன் மாதத்தில் சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 டன் வந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு விளைச்சல் 10 முதல் 15 சதவீதம் சரிந்தது. இங்கு விற்பனைக்கு வந்த மாம்பழத்தை வாடிக்கையாளர்கள் 10 கிலோ முதல் 20 கிலோ வரை பெட்டிகளிலும், 12 பழங்கள் கொண்ட ஒரு டஜனும், கிலோ கணக்கிலும் வாடிக்கையாளர்கள் வாங்கிச்சென்றனர். ஒரு கிலோ மாம்பழம் (மொத்த விலையில்) 50 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டு சீசன் துவக்கத்தில் இருந்தே மாம்பழம் விலை குறையவில்லை. 2 ஆயிரம் டன் மாம்பழம் விற்பனை வந்தது. ஒரு டன்னுக்கு 35 ஆயிரம் வீதம் 2 ஆயிரம் டன் மாம்பழம் 7 கோடிக்கு விற்பனையானது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.