புதுடெல்லி: ஒவ்வொரு மருந்துக்கடையில், ஜெனரிக் மருந்துகளை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளும் வகையில் பிரதான இடத்தில் வைக்க வேண்டும் எனவும், மருந்து விலை குறைவாக்க கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலையை மத்திய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது. பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளுக்கு இணையாக ஜெனரிக் (பொதுப்பெயரில்) மருந்துகள் பல மடங்கு குறைந்த விலையில் இருந்தும் நோயாளிகளுக்கு இது தெரிவதில்லை. மருந்துக்கடைக்காரர்களும் இதைக் கூறுவதில்லை. மருத்துவர்கள் ஜெனரிக் பெயரை மட்டுமே சீட்டில் எழுதித்தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவர்கள் பலர் பிராண்ட் பெயர்களை மட்டுமே பரிந்துரை செய்து வருகின்றனர்.எனவே, பொதுமக்களே பொதுப்பெயரில் உள்ள மருந்துகளை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அவற்றை மருந்துக்கடைகள் காட்சிக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் எஸ்.ஈஸ்வர ரெட்டி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரிய அறிவுறுத்தப்படி, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மருந்துக்கடையிலும், ஜெனரிக் என்பபடும் பொதுப்பெயரிலான மருந்துகளை தனி அலமாரியில் வைத்திருக்க வேண்டும். மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்க மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப இதை மருந்துக்கடைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜெனரிக் மருந்துகள் பயன்பாட்டை அதிகரிக்க புதிய விதிகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தார். இதற்கேற்ப, மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் ஜெனரிக் பெயரை அட்டையில் கொட்டை எழுத்தில் அச்சிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது.அதுபோல், மருத்துவர்கள் ஜெனரிக் பெயரைத்தான் பரிந்துரை செய்ய வேண்டும், பிராண்ட் பெயரை ஒரு போதும் மருந்துச்சீட்டில் எழுதக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதை யாரும் கடைப்பிடிக்காததால் ஏழை நோயாளிகள் அதிக விலைக்கு மருந்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.