புதுடெல்லி: மருத்துவக்கருவிகளின் விலையை கட்டுப்படுத்த விரிவான வர்த்தக லாப ஒழுங்குமுறையை ஏற்படுத்த நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. லாப உச்சவரம்பை 50 சதவீதமாக நிர்ணயிக்க நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட், மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவ கருவிகளின் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்ளை லாபம் அடிப்படை தடுக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்நிலையில், நிதி ஆயோக் கடந்த 8ம் தேதி மருத்துவ கருவி உற்பத்தி நிறுவனங்கள், டீலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இதில் மருத்துவ கருவிகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், இதுகுறித்த கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தது.இதன்படி மருத்துவ கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள், ஒரு பரிந்துரையை சமர்ப்பித்துள்ளன. இதில், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை உள்ள மருத்துவ கருவிகளுக்கு லாப வரம்பை 50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்துள்ளன. இதுபோல் 1,000க்கு மேல் 1 லட்சத்துக்குள் உள்ள கருவிகளுக்கு 66 சதவீதம் வரையிலும், 1,000க்கு கீழ் உள்ளவற்றுக்கு 75 சதவீதம் வரையிலும் லாப வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.மருத்துவ கருவிகள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது 70 சதவீத கருவிகள் இறக்குமதியாகின்றன. இதுகுறித்து தெரிவித்திருந்த நிதி ஆயோக், இறக்குமதி செய்பவர்களும் மருத்துவ கருவி விற்கும் வர்த்தகர்களாகவே கருதப்படுவார்கள். இவர்களின் இறக்குமதி விலையில் இருந்துதான் லாப வரம்பு கணக்கிடப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது. இறக்குமதி செலவுடன் சேர்த்துதான் லாபம் கணக்கிட்பபட வேண்டும். அதேநேரத்தில் ஸ்டாக்கிஸ்டுகளிடம் இருந்துதான் லாபம் கணக்கிட தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதுதொடர்பாக தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் மருத்துவ கருவிகளின் விலையை பெற்று பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், நிதி ஆயோக் மருத்துவ கருவிகளின் விலையை கட்டுப்படுத்த விரிவான வர்த்தக லாப ஒழுங்குமுறையை ஏற்படுத்த இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்து குறைந்த விலையில் கருவிகள் கிடைக்கச்செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.