Saturday, 16 June 2018
வரி உயர்வு காரணமாக விலை உயர்வு காணும் நம்ம பெட்டிக்கடை பொருட்கள்

கோவில்பட்டி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பச்சை மற்றும் வெள்ளைப் பட்டாணி ரகங்களுக்கான வரி 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் பட்டாணி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து பட்டாணி ரகங்கள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. தமிழகத்துக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பச்சை மற்றும் வெள்ளைப் பட்டாணி ரகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள், பட்டாணிகளைக் கொள்முதல் செய்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பட்டாணிகளுக்கான வரி, சில மாதங்களுக்கு முன்பு 50 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த வரி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவில்பட்டி மார்க்கெட்டில் 3 மாதம் முன்பு ஒரு கிலோ வெள்ளை மற்றும் பச்சைப் பட்டாணி ரகங்கள் கிலோவுக்கு 35 வரை விற்கப்பட்டது. வரி அதிகரிப்பால் தற்போது இதன் விலை கிலோ 70 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையில் மந்தநிலை காணப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். வெள்ளைப் பட்டாணி உடைத்து பருப்பாக விற்கப்படுகிறது. மசால் வடை போன்ற உணவுப் பொருள் தயாரிக்க வெள்ளைப் பட்டாணி பயன்படுத்தப்படுகிறது. பச்சைப் பட்டாணி யை மெஷினில் அரைத்து மாவாக்கி சேவு, மிக்சர், பக்கோடா போன்ற நொறுக்குத்தீனிகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். கிலோ 25ல் இருந்து 35 வரை விற்கப்பட்ட பச்சைப் பட்டாணி மாவு, 3 மாதமாக கிலோ 65 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சேவு, மிக்சர் தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் கிலோ 80க்கு விற்கப்படும் இந்த நொறுக்குத்தீனிகள் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.