Saturday, 23 June 2018

உலக பொருளாதாரம் பாதிப்பு ஒரு பார்வை

பிரஸ்செல். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப், பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறார். ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் நீண்ட காலமாக வைத்துள்ள நட்பும் இதன் மூலம் முறிந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு சில மாதங்களுக்கு முன் டிரம்ப் இறக்குமதி வரி விதித்தார். இதனால், டிரம்ப் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன. சமீபத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 600க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் டிரம்ப் இறக்குமதி வரி விதித்தார். உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடாக திகழும் சீனாவின் மீது இந்த நடவடிக்கையைை எடுத்ததின் மூலம், உலக வர்த்தக போரை டிரம்ப் தொடங்கி வைத்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவும் பல ஆயிரம் கோடிக்கு இறக்குமதி வரி விதித்தது. அதேபோல், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் டிரம்ப் இறக்குமதி வரி விதித்தார். இதற்கு பதிலடியாக, பல்வேறு அமெரிக்க பொருட்களுக்கு நேற்று முன்தினம் மத்திய அரசு இறக்குமதி வரி விதித்தது.இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு நேற்று முன்தினம் அதிரடியாக இறக்குமதி வரி விதித்தன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், ஜீன்ஸ் பேன்ட்டுகள், மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை வெண்ணெய், ஆரஞ்ச் ஜூஸ், நெல்லிச்சாறு, லிப்ஸ்டிக், தோல் செருப்புகள், ஸ்டீல் உற்பத்தி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 28 நாடுகளும் ஒரே நாளில் இந்த முடிவை எடுத்தன. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கும் வந்தது. இதன் காரணமாக, அமெரிக்கா உடனான உலக வர்த்தகப் போர் மிகவும் தீவிரமாகி இருக்கிறது. இந்த உலக வர்த்தகப் போரால் பல கோடி மக்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘மாறி மாறி இறக்குமதி வரி விதிக்கப்படும் சண்டையால், முதல் கட்டமாக பங்குச்சந்தையில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். அதைத் தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் அதன் பின்விளைவுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஆணையர் சிசிலியா மல்ம்ஸ்ட்ரோம் கூறுகையில், ‘‘ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கும் அமெரிக்காவின் நியாயமற்ற, தன்னிச்சையாக முடிவுக்கு பதிலடி கொடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனின் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றன’’ என்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல் இங்கிலாந்து அரசுக்கு ‘ஏர்பஸ்’ எச்சரிக்கைலண்டன்: ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகினால், இங்கிலாந்தில் இருந்து வெளியேறுவோம் என ஏர்பஸ் விமான நிறுவனம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக உள்ளது. இது தொடர்பாக இந்நாட்டில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இது உறுதி செய்யப்பட்டது. இது, ‘பிரெக்ஸிட்’ என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘ஏர்பஸ்’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஏர்பஸ்சின் இங்கிலாந்து தயாரிப்பு பிரிவில் 15 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஐரோப்பிய யூனியனுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் ஆழ்ந்த, சிறப்பு புரிதல் உள்ளது. இதனால் தடையற்ற, உரசல் இல்லாத வர்த்தக உறவு நீடித்து வருகிறது. கூட்டமைப்பில் பிரிந்து புதிய நிலைக்கு இங்கிலாந்து மாறும் காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் உடனடியாக கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து பிரிந்தால், அது ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இங்கிலாந்து ஆலையை மூட நேரிடும்’’ என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.