Tuesday, 26 June 2018

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பது, கொள்கை அடிப்படையில் வரவேற்கத்தக்க அமைப்பை ஏற்படுத்தும்

புதுடெல்லி:  கர்நாடக தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியாது. இது சாத்தியமற்றது. ஏனெனில், மத்திய மாநில வரிகளை ஒன்றிணைக்கும்போது மொத்த வரி மிக அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டியில் உச்சபட்ச வரி 28 சதவீதம். இதற்கேற்ப, எத்தனை மாநிலங்கள் தாங்கள் பெட்ரோல், டீசல் மீது விதித்துள்ள அதிக அளவிலான வரியை குறைக்கும் என்று கூற முடியாது.பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பது, கொள்கை அடிப்படையில் வரவேற்கத்தக்கது. இதற்கு முதல்கட்டமாக வரியை படிப்படியாக குறைக்க வேண்டும். ஏற்கெனவே இதுபற்றி நான் தெரிவித்திருக்கிறேன். மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீது மிக அதிக அளவு வரியை விதிக்கின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும். எண்ணெய் மீதான வரியை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விடுபடத் தொடங்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலை என்பது, பொருளாதாரத்தின் மீது விதிக்கப்படும் வரியைப் போன்றது. எனவே, பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி குறைந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதன்பிறகு வருவாய் பல வழிகளில் வரும். அப்போது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது பற்றி யோசிக்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. பெட்ரோலிய வரிகளை சார்ந்துள்ள நிலையில், இதை அமல்படுத்த அவசரம் காட்டவேண்டாம். இல்லாவிட்டால் வேறொரு பிரச்னை உருவாகும். மின்சாரத்தை கூட ஜிஎஸ்டியில் கொண்டு வரலாம். இதையெல்லாம் காலப்போக்கில் தான் செயல்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.