Thursday, 28 June 2018

மொலாசசில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் விலையை லிட்டருக்கு 2.85 அதிகரித்து 43.70 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

புதுடெல்லி:  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேபினட் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மொலாசசில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி பி மொலாசஸ் லிட்டர் 47.49 ஆக நிர்ணயம் செய்துள்ளது. சி மொலாசஸ் விலை லிட்டருக்கு 2.85 அதிகரித்து 43.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி மொலாசஸ் என்பது இறுதியாக கிடைப்பது. இதற்கு முந்தைய நிலை பி மொலாசஸ். வழக்கமாக மத்திய அரசு சி மொலாசஸ் விலையை மட்டுமே நிர்ணயித்து வந்தது. முதல் முறையாக இந்த முறை பி மொலாசஸ் விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19 டிசம்பர் -நவம்பர் சீசனுக்கு இந்த புதிய விலை அமலுக்கு வரும். நடப்பு ஆண்டில் (டிசம்பர் - நவம்பர் சீசன்) சி எத்தனால் விலை 40.85ஆக உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு 22,000 கோடி நிலுவை உள்ளதால், சர்க்கரை ஆலைகள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் எத்தனால் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறத்தி வந்தனர். அதோடு, சர்க்கரை ஆலைகள், சர்க்கரை உற்பத்தியில் இருந்து எத்தனால் உற்பத்திக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் பி மொலாசசுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இறக்குமதியை குறைக்கவும் பெட்ரோலுடன் 5 சதவீதம் எத்தனால் கலக்க 2003ல் முடிவு செய்யப்பட்டது. தற்போது 10 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது. இதன்படி, பெட்ரோலில் கலப்பதற்கு 313 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படுகிறது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்க்கரை ஆலைகள் 113 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்துள்ளன. இதற்கு முன்பு 2015-16ல் 111 கோடி லிட்டர் உற்பத்தி செய்தது சாதனை அளவாக இருந்தது.* தாவரப் பொருட்களில் இருந்து சாறு பிழியும்போது கிடைக்கும் உப பொருள் மொலாசஸ். இது அடர்த்தியான சர்க்கரை, ஹெமி செல்லுலோஸ் மற்றும் தாது உப்புக்கள் கொண்ட கரைசல்.* கரும்பு மொலாசஸ், பீட் (பீட்ரூட்) மொலாசஸ், சிட்ரஸ் (ஆரஞ்ச், திராட்சை) மொலாசஸ், மர (பேப்பர் உற்பத்தியின்போது கிடைப்பது) மொலாசஸ் என நான்கு வகை மொலாசஸ் கிடைக்கிறது.* கரும்பு மொலாசஸ் சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் உப பொருள். இதில் 3 சதவீத புரதம், 10 சதவீத சாம்பல் உள்ளது.* இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்கவும், விலையை கட்டுப்படுத்தவும் மொலாசசில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.