புதுடெல்லி: இந்தியாவில் என்றுமே தங்கத்துக்கு மவுசு அதிகம். உலக அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனால்தான் தங்க பத்திரங்கள் போன்றவை அறிமுகம் செய்த பிறகும், தங்க நகைகளாக வாங்குவதற்கு மக்கள் விரும்புகின்றனர். இது ஆபரணமாக மட்டுமின்றி, புனித உலோகமாகவும், அவசர கால தேவைக்கு பயன்படும் முதலீடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபகாலமாக தங்க நகைகளுக்கு ஈடாக, பிளாட்டினம் நகைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் பிளாட்டினம் நகைகள் விற்பனை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய இரண்டு மடங்கு என்கின்றனர் வர்த்தகர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பிளாட்டினம் நகைகளுக்கு மவுசு கூடி வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் பலர் பிளாட்டினத்தை விரும்புகின்றனர். வித்தியாசமான டிசைன்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் உறுதித்தன்மை ஆகியவை இவற்றை பிற நகைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதிலும், வைரங்கள் பதித்த பிளாட்டினங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதற்காகவே வாங்கக்கூடிய விலையில் சிறிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் நகைகள் வருகின்றன. கையில் அணியும் பாண்ட்கள் சராசரியாக ₹30,000க்கு கிடைக்கின்றன. முன்பு பெண்கள் தங்க நகைகளில்தான் ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது வைரம் பதித்த பிளாட்டினங்கள் வாங்க விரும்புகின்றனர். இளைஞர்களும் பிளாட்டினத்தை விரும்புகின்றனர். ஆண்களுக்கான திருமண நகைகள் பிளாட்டினங்களில் பிரத்யேக வடிவங்களில் இருக்கின்றன. நகைகளில் கைகளில் அணியும் பாண்ட்களை விட மோதிரங்களின் விற்பனை அதிகமாக இருந்தது. அதாவது, மொத்த விற்பனையில் 85 சதவீதம் அளவுக்கு மோதிரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது 50 சதவீத இடத்தை பாண்ட்கள் பிடித்துவிட்டன. இதுதவிர விழாக்கால விற்பனைகள் ஆ்ண்டுக்கு 25 சதவீதம் விற்பனையை அதிகரிக்கின்றன. மொத்த விற்பனையில் ஆண்களுக்கான பிளாட்டினம் நகைகள் பங்களிப்பு 20 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.