கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கையை 2016 நவம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்பிறகு, கருப்பு பண மீட்பின் ஒரு பகுதியாக பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து புதிய பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2016 நவம்பரில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த ஒன்றரை ஆண்டில் 1500க்கும் மேற்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய பினாமி சட்டத்தின் கீழ் நகை வியாபாரிகள் , ஹாவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவோர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,300 கோடி மதிப்பிலான 1,513 சொத்துக்கள் இந்த ஒன்றரை ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, பினாமி சட்டப்படி முடக்கப்பட்டுள்ளன. மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக தலா 200 சொத்துக்களும், போபாலில் 190 சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் கொல்கத்தா (144 சொத்துக்கள்), சண்டிகார் (110), ஐதராபாத் (100), டெல்லி, பெங்களூரு, சென்னை, புனேயில் தலா 90, அகமதாபாத் (89), லக்னோ (50), கொச்சி (40), பாட்னா (30) சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜபல்பூரில் ஒரு டிரைவர் முதலாளியின் 7.7 கோடி சொத்துக்கு பினாமியாக இருந்தார். ராஜஸ்தானில் நகைக்கடைக்காரர் தனது முன்னாள் ஊழியர் பெயரில் 9 சொத்துக்களை வைத்திருந்தார். சில சொத்துக்கள் போலி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளன என்றார். வருமான வரித்துறையில் 24 பினாமி தடுப்பு யூனிட்கள், முதன்மை இயக்குநர்கள் தலைமையில் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.