விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதி பால்கோவாவுக்கு மிகவும் பிரபலமானது. சுத்தமான பாலில் தயாராகும் இந்த பால்கோவாவை, ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தென்மாவட்டங்களுக்கு விசேஷம் மற்றும் சுற்றுலாவுக்காக வருபவர்கள் அதிகளவு வாங்கி செல்வது வழக்கம். மேலும், சிலர் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்கும் வாங்கி அனுப்பி வருகின்றனர்.நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இதனால் அங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு, வாகனங்களில் ஊர் திரும்பும் சுற்றுலாப்பயணிகள், திருவில்லிபுத்தூரில் இறங்கி பால்கோவா வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடைகளில் பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளது. விடுமுறை தினங்களில் கடைகளில் சுடச்சுட தயாராகும் பால்கோவாவை சுற்றுலாப்பயணிகள் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து பால்கோவா தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம், குற்றலாம் சீசன் மற்றும் ஐயப்பன் கோயில் சீசன் காலங்களில் பால்கோவா விற்பனை இருமடங்கு அதிகமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக குற்றால சீசன் சமயங்களில் பால்கோவா விற்பனை சுமாராக இருந்தது. ஆனால், இந்தாண்டு குற்றால சீசனையொட்டி, பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளது. ஊர் திரும்பும் சுற்றுலாப்பயணிகள் ஆண்டாளை தரிசித்து, அப்படியே வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பால்கோவா வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடைகளில் கூடுதல் பணியாளர்களை வைத்து, பால்கோவா தயாரித்து வருகிறோம்,’’ என்றார். விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.