Friday, 15 June 2018

தங்கம் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் கோவை என்ன காரணம் படிக்கலாம் வாங்க...

கோவை: கோவையில் மாதம் 10 டன் நகை உற்பத்தி செய்ய வர்த்தக வாய்ப்பிருந்தும், வெளி நாடுகளுக்கு நேரடி விமானம் இல்லாததால், மாதம் 6 டன் மட்டுமே நகை உற்பத்தியாகிறது. இதனால் மாதம் தோறும் 4 டன் நகை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் நகை தயாரிப்பாளர்கள் 500 பேரும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில் 50 ஆயிரம் தொழிலாளர் பணியாற்றுகின்றனர். நகை தயாரிப்பாளர்கள் கோவை மற்றும் நாடு முழுவதும் உள்ள நகை கடை உரிமையாளர்களிடம் தங்கம் வாங்கி, பட்டறைகளில் நகை தயாரித்து வழங்குகின்றனர். சராசரியாக மாதம் 6 டன் (6,000 கிலோ) தங்க நகை தயாரிக்கின்றனர். இதில் பிற மாநில நகை வியாபாரிகளிடமிருந்து மாதம்தோறும் 3 முதல் 4 டன் தங்கத்தை பெற்று நகையாக செய்து, கூலி பெற்று வருகின்றனர். இதர 2 முதல் 3 டன் நகைகளை சொந்தமாக வாங்கி, நகை தயாரித்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றனர். நகை உற்பத்திக்கு தேவையான தங்கம் சுவிட்சர்லாந்து, தென் அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள், நகை கடை உரிமையாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள்.தங்கத்தை இறக்குமதி செய்யும்போது வாங்கும் விலையானது, அதை கோவையில் நகையாக மாற்றுவதற்கு ஏற்படும் கால இடைவெளி குறுகியதாக இருந்தால் லாபமாகவும், அதிகமாக இருந்தால் லாபமில்லாமலும் உள்ளது. இதனால் நகை தயாரிப்பு தொழிலில், விமான போக்குவரத்து முக்கியமாக உள்ளது. ஆனால், கோவைக்கு சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமான போக்குவரத்து உள்ளது. இதர நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து இல்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், கோவைக்கு நேரடியாக வராமல் டெல்லி, மும்பை, சென்னை, ஆந்திராவிலுள்ள ஸ்ரீசிட்டி ஆகிய நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு, பின் அங்கிருந்து கோவைக்கு வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நகை உற்பத்தி தொழில் கோவை பாதிக்கப்பட்டுள்தளாக நகை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.கோவை சர்வதேச விமான நிலையமாகும். ஆனால், அதற்கேற்ப உள்கட்டமைப்பு இல்லாததால், வெளிநாட்டு விமானங்கள் வருவதில்லை. சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான விமான நிலைய விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் துவங்க அனுமதி கிடைத்தும், கடந்த சில ஆண்டுகளாக அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படாமல் உள்ளது. மேலும் கோவை விமான நிலையத்திற்கு வரும் தங்கத்தை உரிமையாளர்கள் பெறுவதிலும் பல்வேறு கெடுபிடிகள், நீண்ட காலதாமதம் ஆகியவை ஏற்படுகிறது. கோவைக்கு நேரடி விமான சேவை இருந்தால் தற்போதைய நகை உற்பத்தி மாதத்திற்கு 10 டன் மேற்கொள்ள வர்த்தக வாய்ப்புள்ளது. ஆனால், நேரடி விமான சேவை இல்லாததால் மாதத்திற்கு 4 டன் தங்க நகை இறக்குமதியும், இதற்கான நகை உற்பத்தி வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.