வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் தேங்காய் நார் ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள தேங்காய் நார் கயிறு உற்பத்தியாளர்கள் நார்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் தேங்காய் நார் கயிறுகளை திரித்து விற்பனை செய்கின்றனர்.மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் தேங்காய் நார் கயிறுகளை மொத்தமாக கொள்முதல் செய்து சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். கட்டிட தொழிலில் சாரம் கட்டுவது உள்ளிட்ட பணிகளில் தேங்காய் நார் கயிறு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், தேங்காய் நார் பற்றாக்குறையால் கயிறு விலை உயர தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து தேங்காய் நார் கயிறு வியாபாரிகள் கூறியதாவது:தேங்காய் நார் பண்டல்களை வாங்கி வந்து கயிறு தயாரித்து விற்பனை செய்கிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 30 கிலோ தேங்காய் நார் பண்டில் தரத்துக்கு ஏற்ப ₹700 முதல் ₹800 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக தேங்காய் நார் பண்டில் விலை உயர தொடங்கியது. தற்போது, 30 கிலோ பண்டில் தேங்காய் நார் ₹1000 முதல் ₹1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. 30 கிலோ பண்டில் தேங்காய் நாரை கயிறாக திரிக்க ₹500 கூலி செலவிடப்படுகிறது. இதனால், கடந்த 6 மாதங்களில் தேங்காய் நார் கயிறு விலை படிப்படியாக உயர்ந்துவிட்டது. அதன்படி, 30 கிலோ எடையுள்ள கயிறுகள் ₹2000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் சுட்டெரித்த வெயிலில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது. எனவே, விவசாயிகள் இளநீர் விற்பனையில் ஆர்வம் காட்ட தொடங்கினர். இதனால், தேங்காய் மட்டை கிடைக்காமல் நார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆலைகளில் தேங்காய் நார்களை உடனடியாக வாங்க முடியவில்லை. ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால்தான் தேங்காய் நார் பண்டல்கள் கிடைக்கிறது.பற்றாக்குறை நீடிப்பதால், தேங்காய் நார் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேங்காய் நார் திரிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், கூலியும் உயரும் அபாயம் உள்ளது. எனவே, தேங்காய் நார் கயிறு விலை மேலும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.