சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் நேற்று (ஜூன் 1) கலந்துகொண்டார். அப்போது, 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த மே 29ஆம் தேதியன்று இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. அதன்பின், மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவைச் சந்தித்துப் பேசினார் மோடி. நேற்று முன்தினம் (மே 31) அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அங்கு நடந்த வணிக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மோடி, மூன்று இந்திய செயலிகளை அறிமுகப்படுத்தினார். பீம், ரூபே மற்றும் எஸ்பிஐ செயலிகளைப் பயன்படுத்தி, சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் தங்களது உறவினர்களுக்குப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்திய மின்னணு பணப் பரிவர்த்தனை வணிகத்தைப் பொறுத்தவரை, இது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தனது சிங்கப்பூர் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1), அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் நரேந்திர மோடி. சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாகோப் மற்றும் பிரதமர் லீ செய்ன் லூங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதன்பின், லூங் மற்றும் மோடி இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தங்கள் எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இருவரும் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒப்பந்தங்களின் மூலமாக, கடல் வழிப் போக்குவரத்து பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மோடி. சிங்கப்பூர் - இந்தியா இடையே நேற்று எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியைப் பார்வையிட்டார் மோடி. அப்போது, அந்நாட்டுக் கல்வி அமைச்சர் ஓங் யே குங் அவருடன் இருந்தார். இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில், அங்கு வேப்ப மரம் நட்டார் மோடி. அதன்பின் அவர் அப்பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
“இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், ஆசியர்களான நாம் அதை உணர்கிறோமா, இல்லையா என்பதுதான் மிகப்பெரிய சவால். நாம் அதைச் சிந்திக்கிறோமா? ஆசியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நூற்றாண்டு நமக்கானது என்று பணியாற்றுவதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும்” என்று மாணவர்கள் மத்தியில் பேசினார் மோடி. அப்போது ஒரு மாணவரின் கேள்விக்குப் பதிலளித்த மோடி, தடைகள் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை என்றார். தடைகளைக் கண்டு பயப்படாமல் அதை வரவேற்க வேண்டுமென்றும், அது பல வாய்ப்புகளை அளிக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலையில் மோடி ஷாங்கிரி லா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதில் கலந்துகொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.