Monday, 11 June 2018

500 ,1000ரூபாய் பணமதிப்பு இழப்புக்கு பிறகு தற்போதய நிலை அதிர்ச்சி அளிக்கும் தகவல் இதோ....

புதுடெல்லி : முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்களிடம் ரூ.18.5 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் கையிருப்பில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள பணத்தின் விவரத்தை வாரம் ஒருமுறையும், மக்களிடம் கையிருப்புள்ள பணத்தின் அளவு பற்றி விவரத்தை 2 வாரத்துக்கு ஒருமுறையும் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிடுகிறது. இந்த அறிக்கையை நேற்று அது வெளியிட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் அடங்கியுள்ளன. அதன் விவரம்: *இந்திய பொருளாதாரத்தில் இப்போது செய்யப்படும் மொத்த பண பட்டுவாடாவின் அளவு ரூ.140 லட்சம் கோடி. இதை ‘எம்3’ என்ற குறியீட்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது. இது கடந்தாண்டை விட 11 சதவீதம் அதிகம். கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுக்கும் முன்பாக இது ரூ.120 லட்சம் கோடியாக இருந்தது. மத்தியில் பாஜ அரசு பதவிக்கு வரும் முன்பாக இது ரூ.100 லட்சம் கோடியாக இருந்தது. பொதுமக்களிடம் உள்ள பணம், வங்கி டெபாசிட், இதர நிதி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என அனைத்தும் இந்த கணக்கில் அடங்கும்.*பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக மக்களிடம் கையிருப்பு இருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடி. இப்போது அவர்கள்ம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரூ.18.5 லட்சம் கோடியை கையிருப்பில் வைத்துள்ளனர். வங்கிகள், நிதி நிறுவனங்களில் உள்ள பணத்தின் அளவை கழிப்பதின் மூலம், மக்களிடம் உள்ள பணத்தின் கையிருப்பு கணக்கிடப்படுகிறது. *அதே நேரம், நாட்டில் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ள மொத்த தொகையின் அளவு ரூ.19.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.8.9 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது இது 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நாட்டில் சில மாதங்களுக்கு முன் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பிரச்னையை சமாளிக்க புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பதை மத்திய அரசு அதிகரித்தது. இந்நிலையில், மக்களிடம் ரூ.18.5 லட்சம் கோடி கையிருப்பு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, பணத்தை பதுக்குதலுக்கு வழி வகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.