Sunday, 10 June 2018

மாம்பழம் பார்த்து ரசிக்க கண்காட்சி

 லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வரும் 23ம் தேதி தொடங்கி 2 நாட்கள் மாம்பழக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 700 ரக மாம்பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. நாட்டிலேயே மாம்பழ உற்பத்தியில் முன்னணியில் வகிக்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் விளங்குகிறது. இந்த நிலையில் தலைநகர் லக்னோவில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழக் கண்காட்சியை நடத்த அம்மாநில தோட்டக்கலைத்துறை மற்றும் உணவு உற்பத்தி துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் இயக்குனர் ராகவேந்திரா பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆம் மகோத்சவா-2018' என்ற பெயரிலான மாம்பழ திருவிழா வரும் 23ம் தேதி தொடங்குகிறது. மறுநாள் வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் 700 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படும். உத்தரப் பிரதேச மாநிலம் 40 முதல் 45 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மாம்பழத்தில் 23 சதவீதமாகும். இந்த நிகழ்ச்சி மூலம் மாம்பழ ரகங்கள் பற்றி பொதுமக்கள் கூடுதல் தகவல்களை பெறமுடியும் என்பதுடன் தோட்டக்கலைத்துறை சுற்றுலாவை ஊக்குவிக்க உறுதுணையாக இருக்கும். நிகழ்ச்சியில் மாமரங்கள் வளர்ப்போர் சந்திக்கும் பிரச்னை மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக உற்பத்தியை ஈட்டுவது எப்படி என்பது தொடர்பாக கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.